மரபு ஆடை நாளை வரவேற்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் அமைச்சரின் மரபார்ந்த ஆடை வேண்டுகோள்
சாலச் சிறந்தது! –
மரபு ஆடை நாளை வரவேற்போம்!
தலைமைச்செயலகத்தில் நவம்பர் முதல்நாள் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற் மாண்புமிகு தமிழ்வளர்ச்சி, பள்ளிக்கல்வி அமைச்சர் இராசுமோகன் வாரத்தில் ஒருநாள் அரசு ஊழியர்கள் அலுவலர்கள் வேட்டிசட்டை உடுத்தி வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மரபு உடை என்பதால் பெண்கள் சேலை அணிய வேண்டும்.
மரபுச்சங்கிலி அறுபடாமல் தொடர்ந்து இருக்க வேண்டும். இதனால் பண்பாட்டு விழுமியங்கள் பேணப்படும். மரபு உடைகள் பேணப்படுவதற்கு இந்த வேண்டுகோள் ஆணையாகும் பொழுது அடிப்படையாக அமையும். எனவே, மரபு உடை பேணுவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கையை நாம் வரவேற்க வேண்டும். இதனை அறிவித்த அமைச்சர் மாண்புமிகு இராசுமோகனுக்கும் பாராட்டுகள்!
மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் திரு.பெ.சண்முகம் மாநிலத்திற்குள்ளேயே வட்டாரங்களுக் கேற்ப மரபு உடைகள். மாறுபடும். எனவே, “அரசு ஊழியர்கள் வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என்ற ஆலோசனையை அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். தன்னை நடுநிலைவாதிபோல் காட்டிக்கொள்வதற்காக நாளும் பொருத்தமில்லா ஓர் அறிக்கை வெளியிடுவதையே கொள்கையாகக் கொண்டவர். அவரது அறிக்கைகளைப் பொதுமக்கள் பொருட்படுத்துவதில்லை. எனவே, பொருத்தமில்லா இவ்வறிக்கையை அரசு பொருட்படுத்த வேண்டா. என்றபோதும் அவர் எப்போதும் வேட்டி சட்டை, துண்டினை அணியும் மரபாடைக் காவலர். எனவே, அவரைப் பாராட்டிப் பிறரும் அங்ஙனம் நடந்து கொள்ள அரசு நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுகிறோம்
வட்டாரங்களுக்கேற்ப மரபு ஆடை மாறும் என்னும் கூற்றையும் ஏற்பதற்கில்லை. தமிழ்நாட்டரசிற்கு மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் மரபைப் பேணுவதில்தான் முதன்மைக் கருத்து இருக்க வேண்டும். மேலும் வேட்டி அணிவது என்பது தமிழர்களின் மரபு உடை மட்டுமல்ல. தமிழ்க் குடும்பமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழி பேசுநரும் இவ்வுடையைப் பேணுகின்றனர். தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வேட்டி அணிவோர் உள்ளனர். இலங்கை, மாலத்தீவு, வங்காளதேசம், மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் முதலான வெளி நாடுகளிலும் வேட்டி அணிவோர் உள்ளனர். ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் பரவியுள்ளதால் உலகெங்கும் வேட்டி சட்டை அணியும் பழக்கம் நிலவுவதை அறியலாம்.
பொதுவாக வேட்டி அணிந்து உடன் சட்டையுடன் மேலே துண்டும் அணிவதுதான் மரபு உடை. என்றாலும் ஊரில் முதன்மை நிலையில் உள்ளவர்கள் தவிரப் பிறர், மேல் துண்டை அணிவதில்லை.
அரசு ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகச் செய்தி வந்துள்ளது. பொதுவாக எழுதப்பட்ட செய்தியாக இஃது உள்ளது. வழக்கமாக எந்தச் சங்கத்தினர் எந்தெந்த பொறுப்பாளரக்ள் எதிர்க்கின்றனர் என்று குறிப்பர். அவ்வாறில்லாமையால் அரசிற்கு எதிராகவே செய்தியை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டோர் வெளியிடும் செய்தியாக உள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், பெருந் தொடரிகளில்(Metro) பயணம் மேற் கொள்வோருக்கு வேட்டி அணிவது நடைமுறைச் சிக்கலகளை ஏற்படுத்தும் என்று கூறினராம்.
திருமண நாள், பிறந்த நாள் முதலிய சிறப்பு நாட்களில் வேட்டி அல்லது சேலை அணிவோர் பெரும்பான்மையர் உள்ளனர். கோவிலுக்குச் செல்வதாயின் வேட்டி, சேலை அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் பலர் உள்ளனர். பல கோயில்களில் வேட்டிஅணிந்துதான்வரவேண்டும் என்ற விதியும் உள்ளது. எந்நாளும் வேட்டி அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ளோரும் பலர் உள்ளனர். இவர்களெல்லாம் ஈருருளிகளை ஓட்டாமலா இருக்கின்றனர்?
“முறையான (Formal) உடையில் வர வேண்டும் என்ற விதி மட்டுமே உள்ள நிலையில், குறிப்பிட்ட உடையைக் கட்டாயப்படுத்துவது தனிமனித ஆடை உரிமைக்கு எதிரானது” எனவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம். தனி மனித உரிமை என்ற பெயரில் குமுகப் பண்பாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது ஏற்புடைத்தல்ல. மேலும் பிற வகை உடைகளை அணிய அரசு எதிர்க்கவில்லை. மக்களின் ஒரு பகுதியினரான அரசு ஊழியர்கள் வாரம் ஒரு நாள் மரபு உடையாகிய வேட்டி சட்டையை / சேலையை அணிய வேண்டும் என்றுதான் கூற உள்ளது. எங்ஙனம் இது தனிமனித உரிமையில் தலையிடுவதாகும். மனித உரிமை என்ற பெயரில் மண்ணின் மைந்தர்களின் பழக்க வழக்கங்களைக் கேலி செய்வதுதான் தவறாகும்.
நினைவிற்கு வரும் ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன்.1996-2011 ஆம் ஆண்டுகள் மும்முறை ச.ம.உறுப்பினராக இருந்த திரு. சி. ஞானசேகரன் 1998 இல் கலை பண்பாட்டுத்துறை விழாவில் கலந்து கொண்ட போது, நான் வேட்டி அணிந்திருந்தைப் பார்த்து “அதிகாரியை வேட்டியில் பார்ப்பது அழகாக உள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிய ஆணை பிறப்பிக்க வேண்டும். குறைந்தது வாரம் ஒருநாளாவது இதைப் பின்பற்றச் செய்ய வேண்டும்” என்றார். அவரது அன்றைய வேண்டுகோள் இன்றைக்கு நிறைவேற இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
சனவரி 6ஆம் நாள் வேட்டி நாளாகக் கொண்டாடப்பட்டு அன்றும் வேட்டி அணிவோர் மிகுதியானோர் உள்ளனர். ஐநாகஅப அமைப்பு(UNESCO) வேட்டிநாளை அறிவித்ததாக விக்கிபீடியா முதலிய சில தளங்களிலும் தினத்தந்தி முதலிய இதழ்களிலும் காணப்படுகின்றன. இது தவறான செய்தி. சிலர் இவ்வமைப்பு வேட்டி, சேலையை மரபு உடையாக ஏற்றிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இதுவும் தவறாகும்.
இந்தியா புவிசார் குறியீட்டில் சில வகை பட்டுச்சேலைகளையும் பருத்திச் சேலைகளையும் சில வகை வேட்டிகளையும் சேர்த்துள்ளது. இது ஐநா அமைப்பின் அறிந்தேற்பு அல்ல. ஆதலால், தமிழ்நாடு அரசு ஐ.நா.பண்பாட்டு அமைப்பின் உலகளாவிய அறிந்தேற்பைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேட்டி நாள் குறித்த சரியான விவரம் எதுவும் இல்லை. ஆனால், திரு சகாயம் இ.ஆ.ப. நெசவுக்கூட்டின்(கோ-ஆப்டெக்சு-கைத்தறி கூட்டுறவு சங்கங்களின்) மேலாண் இயக்குநராக இருந்த போது 2013 இறுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இளைஞர்களிடம் வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் நெசவுத் தொழிலாளர்கள் நிலையை மேம்படுத்தவும் ‘வேட்டி நாள்’ கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இவரது இந்த முன்னெடுப்பிற்குக் கிடைத்த பெரும் வரவேற்பால், 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சனவரி 6-ஆம் நாள் பன்னாட்டு வேட்டி நாளாகக் (International Dhoti Day) கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் இதற்கு முன்பிருந்தே கல்லூரி மாணாக்கியர் ஒரு நாள் அனைவரும் சேலை அணியும் பழக்கத்தைக் கொண்டாடி வந்தனர். இன்ஃபோசிசு நிறுவனத்தில் பொறி.தி.ஈழக்கதிர் முன்னெடுப்பால் வேட்டி நாள் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. பிற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் வேட்டி நாளைக் கொண்டாடி வருகின்றன.
ஆனால் தமிழ்அமைச்சர் இராசுமோகன்கூறுவது இவ்வாறான ஆண்டிற்கு ஒரு நாளை அல்ல. வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்கிறார். எனவே, நாம் அனைவரும் எவ்வகை வேறுபாடின்றியும் இதனைக் கொண்டாட வேண்டும். இந்நாள் திங்கள் அல்லது வெள்ளியாக இருந்தால் ஊருக்குச் செல்லுதல் அல்லது திரும்புதல் சூழலில் அவசரகதியில் நேரம் கிடைக்காமல் போகலாம். எனவே, வாரத்தின் நடுநாளாகிய புதன் கிழமையை மரபு உடைநாளாக அறிவித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாணை தமிழ்நாட்டரசு ஊழியர்களுக்கு மட்டும் என்றில்லாமல் தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு, பிற மாநில அரசு, தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், தனிப்பட்ட அலுவலகங்கள் என எல்லாவற்றிலும் பணியாற்றும் அனைவரும் பின்பற்றுமாறு ஆணை யிட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பிற இன மக்கள் இம்மண்ணின் மரபைப் போற்ற வேண்டியதைக் கடமையாகக் கருதிப் பின்பற்ற வேண்டும்.
வாரம் ஒரு நாளேனும் மரபாடை அணிவோம்!
வருகின்ற தலைமுறைகளுக்குப் பண்பாட்டைக் கொண்டு செல்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல








Leave a Reply