உலகத் தமிழ்நாள் + இலக்குவனார் பெருமங்கலம் + அமைச்சர் வாழ்த்து + சுருக்கச் செய்தி

உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பெருமங்கலம்,
குறள் விருதுகள் வழங்கல், நூற்கள் வெளியீடு
ஐப்பசி 29, 2057 / 15.11.2026
தமிழ் அமைச்சர் வாழ்த்துடன் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இன்று(ஐப்பசி 29, 2057 / 15.11.2026) சென்னையில் புலப்பாட்டுப் புத்தக அரண்மனைக்கலைக்கூடத்தில் உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பெருமங்கலம், குறள் விருதுகள் வழங்கல், நூற்கள் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் இணைந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தில் பங்கேற்றல், எதிர்பாரா நேர்ச்சி, திடீர் நலக்குறைவு போன்ற காரணங்களால் வர இயலவில்லை என முன்கூட்டியே தெரிவித்தவர்களைவிடப் பிற விருதாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
விழாவிற்குத்தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். விழா குறித்தும் இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தைத்தலைமைதாங்கி நடத்திய பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், விருதாளர்கள, புத்தக வெளியீடுகள் குறித்தும் தெரிவித்த பின்பு மாண்புமிகு தமிழ்வளர்ச்சி, கல்வி, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் உயர்மிகு இராசுமோகன் அவரகள் அனுப்பியிருந்த வாழ்த்துச்செய்தியை வாசித்தார். வாழ்த்துச் செய்தியில் மாண்புமிகு அமைச்சர் இராசுமோகன் அவர்கள் பின் வருமாறு தெரிவித்திருந்தார்.
வாழ்த்துச் செய்தி
தனித்தமிழ் இயக்கத்தின் போர்வாள்போல் நின்று செந்தமிழின் தூய்மையையும் திருக்குறளின் விழுமியங்களையும் தம் மூச்செனக் கொண்டு வாழ்ந்த தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் 117ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழாவும் உலகத்தமிழ்நாள் கொண்டாட்டமும் திருவள்ளுவராண்டு 2057 ஐப்பசி 29(15.11.2026) அன்று சென்னை கே.கே.நகரில் உள்ள புலப்பாட்டுப் புத்தக அரண்மனையில் மிகச் சீர்மிகு முறையில் நடைபெறுவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
தமிழ்மொழியினைக் காக்கவும் வள்ளுவம் போற்றவும் தம் வாழ்நாளையே ஈந்த செந்தமிழ்க்காவலர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் புகழுக்கு மகுடம் சூட்டும் வகையில் இவ்விழாவில் பத்துஅரிய தமிழ் ஆய்வு மற்றும் குறள்நெறி நூல்கள் வெளியிடப்படுவது தமிழுலகுக்குக் கிடைத்துள்ள மாபெரும் அறிவுக் கருவூலங்களாகும். பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் படைத்த வள்ளுவர் கண்ட இல்லறம், தமிழ்க்கற்பிக்கும் முறை, Tamil Language ஆகிய நூல்களோடு, அவர்தம் பெருமித வாழ்வையும் திருக்குறளின் நுட்பங்களையும் பறைசாற்றும் வகையில் அறிஞர் பெருமக்கள் எழுதித் தொகுத்துள்ள நூல்கள் யாவும் தமிழ்கூறு நல்லுலகிற்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சும் என்தில் ஐயமில்லை.
தமிழ்ப்பணியையும் திருக்குறள் நெறியையும் உலகெங்கும் பரப்பி வரும் சான்றோர்களையும் அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் போற்றிப் பெருமைப்படுத்தும் விதமாக இலக்குவனார் திருக்குறள் விருதுகள் சிறப்பு விருதுகள் மற்றும் இலக்குவனார் குறட்பணித் துணைஞர் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்டுவதும் விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் அறிவுப்பரிசாக நூல்கள் வழங்கப்படுவதும் மிகவும் போற்றுதலுக்குரிய நற்செயல்களாகும்.
இலக்குவனார் இலக்கிய இணையம் மற்றும் இலக்குவனார் இலக்கியப் பேரவை ஆகிய அமைப்புகளின் சார்பில் திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் சீரிய ஒருங்கிணைப்பில் நடைபெறும் இத்தமிழ்த்திருவிழா வெற்றியடையவும் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் ஏற்றி வைத்த தனித்தமிழ்ச் சுடர் தலைமுறைகள் தாண்டி ஒளிவீசவும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
அன்புடன்
(இராசுமோகன்)
தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் குறிததும் நிகழ்வுகள் குறித்தும் செறிவாகவும் சிறப்பாகவும் குறிப்பிட்டு நல்வாழ்த்துகளைத்தெரிவித்த அமைச்சர் பெருமகனாருக்கு அனைவர் சார்பாவும்நன்றி தெரிவித்தார்.
ஆய்வுலக வழிகாட்டிப் பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம், ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான்சாமுவேல், திருக்குறள் தலைமைத்தூதர் முனைவர் கு.மோகன்ராசு ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்ந்து நூல்கள்வெளியீடும் விருதுகள் வழங்கலும் நடைபெற்றன.
தொடக்கத்தில் செயலர் தமிழ்க்காதலன் வரவேற்புரை யாற்றினார்.நிறைவில் கவிஞர் இல. சாந்தா நன்றி நவின்றார்.
நூல்கள் வெளியீடுகள் குறிததும் விருதுகள் வழங்கப்பட்டமை குறித்தும் தனித்தனிச்செய்திகள் பின்னர் வெளிவரும்.
-அகரம்






Leave a Reply